எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label மலர். Show all posts
Showing posts with label மலர். Show all posts

ஒரு மல்லி சூடவில்லை





  • ஒரு மல்லி சூடவில்லை
    ஒரு மல்லி கசங்கவில்லை
    ஒரு புடவை கூடவில்லை
    ஒரு புடவை களையவில்லை
  • அன்னம் பால் ஊட்டவில்லை
    கிண்ணம் தேன் சுவைக்கவில்லை
    எண்ணம் எங்கும் காதல்
    தின்னத் தோனும் காமம்.
  • விருந்தினர் வாராத நமதில்லத்தில்
    வெறுந்தரையில் நாம் காதலிப்போம்.
    எனை நீராட்ட முயற்சித்து
    உனை குளிப்பாட்டிக் கொள்வாய்.
  • ஒருதட்டில் பசியாருவோம்
    நான் புசித்திருக்க நீ கையலம்புவாய்
    நீ புசித்தவுடன் நான் விரல் கட்டே
    போட்டுக்கொள்வேன்.வலியில்லை.
  • ஒரு போர்வைக்குள் இருதூக்கம் எப்படி?
    சிறு குழந்தையென வினவுகிறாய்.
    ஒருபோர்வைக்குள் எதுக்கடி தூக்கம்?
    பெருங் குறும்புகள் புரிவோம் வா.,
  • வடிந்தவுடன் முடிந்துவிடும் காமமன்று
    விடிந்த பின்னும் ஓடும் காதல்நதி நமது
    ஒடிந்தாலும் மணம்வீசும் முல்லை நீ.
    கருகியும் காதல் விதை பரப்புகிறாய்.
  • "என்னென்ன பிடிக்கும் உனக்கு?"
    என்னவன் உன்னை மட்டுந்தான் எனக்கு.
    பின்னெங்கடி போனாய் தவிக்கவிட்டு.
    விண்ணோடும், மண்ணோடும் என் செய்வேன்?
  • என்னோடு வருவேன் என்றாய்.
    எமனோடு எங்கு போகிறாய்?
    நரகத்தில் நான் துவழ,
    சொர்க்கத்தில் என்னடி செய்கிறாய்?
  • நான் காத்திருக்க வருவாய் குவளைபாலோடு.
    ஏன்?சொர்க்கத்தில் நடக்கும் இரவுக்கு
    முந்திக்கொண்டு நீயும் காத்திருக்கிறாய்.
    பிந்தியும் வருவேன் நான்,அந்தி சாயும்.
  • பன்னீரில் தான் உனை நீராட்டுவேன்-சொட்டும்
    நன்னீர் கருங்கூந்தலில் முகம் புதைவேன்.
    வெந்நீர் மலர்மேனிக்கு வேதனையோ?
    கண்ணீருக்கென கண்களும் வரண்டதடி.
  • பாவை யெல்லாம் இனித்தது-தேன்
    பாகு கூட கசக்குது
    போடி நீயும் முன்னால்-வருவேன்
    பேடி நானும் பின்னால்.

December மலர்





  • எனக்கென பூத்த
    December மலர் - இந்த
    காதல் தினத்தில்
    காணாமல் போய்விட்டது.
  • பாலையினும் பிரியோய், - பனை
    ஓலையில் வருகிறாள் - சிறு
    பாடையில் போகிறாள்.
  • பிறக்கவிருந்த
    எட்டு பிள்ளையில்
    எந்த பிள்ளை கொள்ளிவைத்தான் ?
    எந்த பிள்ளை உரிவுடைத்தான்?
  • ஒற்றை ரோஜா உத்தேசித்திருந்தேன்
    மாலை ரோஜா பெற்றுக்கொண்டாய்.
    அத்துனை காதல்,என் மேலா?
  • எனக்கும் அரசியானவள்
    இனிக்கும் அரசிலானவள்
    வாய்க்கரிசி வாங்காது போகிறாள்

  • ஊதா புடவை உனக்கு
    எடுப்பென்றேன் - உன்
    உயிரை எடுக்குமென்றா?இல்.
  • உனக்கென கொண்டுவருகிறேன்.
    புடவையொன்று.சட்டம்போட்ட
    உன் நிழலுக்கும் அது
    எடுப்புதான்.
  • விடுதலையை நீஎடுத்துவிட்டு
    ஆயுட்சிறையை எனக்கொடுத்துவிட்டாய்.
    விருப்பந்தான்.
  • கேள்விமட்டுங் கொண்ட
    விநோத விடைதாளிது.
    எனக்கென இல்லாது-[மதிப்பெண்]
    நூறும் பெற்றுக்கொண்டாய்.
  • காப்பேனென கரம்பிடித்தாய்.
    காமமென சிறையாமர்ந்தாய்.
    காணோனென பறந்துவிட்டாய்.
  • ஒரு சிறுமலர் தான் என்காதல்.
    பட்டென மொட்டு வெடித்தாய்.
    வனமெங்கும் காதல் வீசுகிறது.
  • புத்தாண்டில் மொட்டுஇட்டு,
    Decemberல் பூத்து,
    காதல் தினத்தில் கருகிவிட்ட - என்
    December மலரே.,
  • என்னை
    சுவாசித்து,வாசித்து,நேசித்த
    December மலரே.,
  • எப்படியுரைப்பேன்?
    வனமெங்கும் வாசம்.
    துளித்தேனை தேடுகிறேன்.

சுற்றம் என்று சூழும் ?





  • குச்சு கட்டியவன் ஒருவன் கண்
    வச்சு காத்தவன் மருவன் - கை
    பிடிச்சு வந்தவன் இவனே வெண்
    பிச்சி கொண்டு வருவானோ?
  • வெட்கம் வந்த நேரம் - என்
    பக்கம் கூற மறந்தாள் - புது
    சொர்க்கம் கண்ட பின்னும் இவள்
    தர்க்கம் இனி எங்கு வெல்லும்?
  • குத்தும் என மழித்தான்
    குத்தம் என மறுத்தாள்.,
    பத்தும் மிவள் மறக்கவேண்டும்.,
    சுற்றம் என்று சூழுமோ?
  • புன்னை யாக்கி விட்டாள் என்னை
    தன்னை மறக்கும் தமக்கை.
    பின்னும் ஊறும் தமிழ்., ஆதவன்
    கன்னி கூட ஆகும் எட்டு திங்கள்.,


[தமக்கைக்கு.,]
மு.கேசவன்
2008-12-31

நுணி மேலொரு பனி






விதவையாய் போய்விட்ட - என்
வெற்றுப்பக்கங்களை
வரிகள் கிறுக்கி
வளம் சேர்த்துவிட்டாள்

மழைத்த காலையின்
முளைத்த காளானென
உள்ளத்தின் காமம்
நட்டுவிட்டு போகிறாள்

பட்டுப்போன மரத்தின்
பொத்திவைத்த மொட்டுக்கான -நீர்
இட்டு காமம் வளர்க்கிறாள்

துளிர்க்கும் பச்சையென
பரவும் இச்சையுது.
காமத்தின் முத்தமென
நுணி மேலொரு பனி.

பொய்யுரைக்கும் தோழி







தொலைந்து விட்ட உன்
கடிகாரத்தின் நேரத்தில் என்
காலத்தின் சுழற்சி நின்றுவிட்டது

அழைத்துபேசிய மணியேசையில்
ஒளித்து விட்டு வைத்துபோகிறாள்.
யாழையும்,குழலையும்.

நிழலென ஒதுங்கிய மரத்தின்,
அலரென மலரென உதிர்க்கிறாள்.
சுழற்சியின் இளைப்பாறுதல் இவள்.

வளை கொண்ட கரம்
கலை மறந்த தென்ன?
"தலைவன் வருவா னென".

பொய்யுரைக்கும் தோழிகூற்று
நதியுறுஞ்சும் பாலையின்
காமத்தின் அனல்.

இனிமையான வெறுமைகள்!







வீசி வரும் தென்றல்
உன்னில் உதிர்த்துவிட்டு
செல்லும் சூடுமலர் - என்னில்
கோர்த்துக்கொள்ளமுடிவதில்லை.,

பரவசப்பட்டு நீ எங்கோ
ஓடுகையில் தெறித்து
சிதறிய கொழுசின்
மணி தேட முடிவதில்லை.,

எப்பொழுதாவது சிக்கிக் கொள்ளும்
நீளக் கூந்தலை நீ விடுவிக்கையில்
விடுதலையாகும் ஒற்றைமுடியை
என்னோடு ஒட்டிக்கொள்ளமுடிவதில்லை.,

பயணப் படுகையில் பள்ளிக்கு
கூட்ட நெரிசலின் இடையில்
படியில் நின்று,ஒரு பயணச்சீட்டு - உன்னில்
கேட்டுப்பெற முடிவதில்லை.,

மின்னல் சிந்தனைகளில் நீ
அறியாது செய்கையில்
தெரியாது உடைந்து விழும்
கண்ணாடி வளையலில் என்
முகம் இரசிக்க முடிவதில்லை.,

கடந்து சென்றபின் - நீ
நடந்து விட்டுச் சென்ற
பாத சுவட்டில் என் கால்கள்
சிக்கிக் கொள்ள முடிவதில்லை.,

பேசிக்கொண்டிருக்கையில் அனிச்சையாய்
கரத்தில் ஒட்டிய பொட்டை
என் சுவர் தேவதையின்
நெற்றியில் அழகு பார்க்கமுடிவதில்லை.,

மறதியோடு நீ
கொடுத்து விட்டுச் சென்ற
வெள்ளை நிற கைக்குட்டையில்
ஒளிந்திருக்கும் உன் வாசம்
நான் கொள்ள முடிவதில்லை.,

*******
*******
*******

இனிமையாய் தானிருக்கிறது
இந்த வெறுமைகளும்
உன்னில் என்பதால்
மட்டும்!








வார்தைகளை நான்
கிறுக்கிய காலம் போய்
வார்தைகள் எனை
கிறுக்குகின்றன ,இன்று.,

காலச் சக்கரத்தில்சிக்கிக்கொண்டது
என் மரபு,புதுக்கவிதை
நீ புலனாய்.,

உன் போலவே எல்லையில்லை,
தோட்டத்து முல்லையினும்
காட்டுக் கொடிகள் காட்சியன்றோ…?

என் விரல்களை ஒடிக்கின்றன,
வரிகள்,வலியில்லை.
வரிகளை பிரியமட்டும்…

என் எழுத்துக்கள்,என் வரி
என் வரிகள்,என் கவிதை
என் கவிதை எனதில்லை
என்ன
செய்வேன்? அய்யகோ…

காத்திருக்கிறேன்,
ஒரு நாள் கவிதை
இப்படி கிறுக்கும்.,

எப்படி இருக்கிறாய்,நீ…?

பத்திரம்

ஒரு கண்ணாடி யணிந்துகொள்
யாரேனும் பறிக்கக் கூடும்
காலையில் மலர்ந்த மரைகளென,
மையிட்ட உன் கண்களை..,

மு.கேசவன்
11/07/2007